Saturday, June 10, 2017

“சிவன் மனசுல என்ன இருக்கோ? யாருக்குத் தெரியும்?”


சிவன் மனசுல என்ன இருக்கோ? 
யாருக்குத் தெரியும்?”
சமீபத்தில் இந்த வசனத்தை அறியாதவர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். ஆம். பாகுபலி முதல் பாகத்தில் இடம்பெற்ற வசனம். பாகுபலி இரண்டாம் பாகம் முடியும்போதும் திரையில் இந்த வசனம் எதிரொலிக்கும். இந்த வசனம் எவ்வளவு நிதர்சனமான உண்மை!
என்னுடைய உடன் பிறவா சகோதரரும் நலம் விரும்பியுமான திரு.DMag சரவணன் மற்றும் நண்பர் கோகுல் அவர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, “காஞ்சனகிரிகோயிலுக்கு செல்ல முடிவு செய்து கிளம்பினோம்.
காஞ்சனகிரி வரலாறு: 
 ----------------------------------
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலமான திருவல்லம்தற்போது திருவலம் என அழைக்கப்படுகிறது. இங்கு சிவபெருமான் வில்வநாதர் என்னும் திருப்பெயரிலும், அம்பாள் பாலகுஜாம்பாள் (இளமுலை நாயகி அம்மன்) என்னும் திருப்பெயரிலும் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இத்திருத்தலத்திற்கு காஞ்சனகிரி மலையில் இருந்து தினந்தோறும் புனித நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்தது. இம்மலையில், காஞ்சன் என்னும் அரக்கன் வாழ்ந்து வந்தான். புனித நீர் எடுக்கச் செல்லும் கோயில் அர்ச்சகரை தினந்தோறும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் இது எல்லைமீறவே, வில்வநாதீஸ்வரர் நந்தியம்பெருமானை அனுப்பி காஞ்சனை வதம் செய்தார் என்பது வரலாறு.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க அவன் தவம் புரிந்த மலை கஞ்சனகிரி எனப் பெயர் பெற்றது. அவனுக்குத் திருக்காட்சித் தந்து மோட்சமளித்த இடம் கஞ்சன ஏரி எனவும், சிரசு விழுந்த இடம் சீக்கராஜபுரம் எனவும், மார்பு விழுந்த இடம் மாவேரி எனவும், வலது கால் விழுந்த இடம் வடகால் எனவும், தென்திசையில் இடது கால் விழுந்த இடம் தெங்கால் எனவும், மணிக்கட்டு விழுந்த இடம் மணியம்பட்டு எனவும், குடல் விழுந்த இடம் குகையநல்லூர் எனவும், நரம்பு முதலான பகுதிகள் விழுந்த இடம் நரசிங்கபுரம் எனவும், மார்பு பகுதியின் சில பாகங்கள் விழுந்த இடம் மருதம்பாக்கம் எனவும், கபாலத்தில் உள்ள நெற்றிப் பகுதி (லாடம்) அல்லது புருவ மத்தி விழுந்த இடம் இலாலாப்பேட்டை எனவும் பெயர் பெற்றன. அசுரனது குருதித் துளிகள் சிந்திய இடங்களில் அவை உருவமற்ற சுயம்பு லிங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு காஞ்சகிரியில் மொத்தம் 1008-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை 1008 சுயம்பு சிவலிங்கங்களாக கருதி மக்கள் வழிபடுகின்றனர்.
வேலூரில் இருந்து இராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையை கடந்து சென்றால், 2 கி.மீ. தொலைவில் இலாலாப்பேட்டை உள்ளது. இங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நீண்ட நெடிய மலைப்பாதையில் 10 நிமிடம் பயணம் செய்தால் காஞ்சனகிரி மலை உள்ளது.
இங்கு சுயம்பாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். எதிரே, 1891ல் பிறந்து 1973ல் முக்தியடைந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞான சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. அருகில் சப்த கன்னியர் கோயில். ஒரு பெரிய சிவ லிங்கம், ஆஞ்சநேயர் கோயில், வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில், நாகலிங்க மரத்தடியில் நாகராஜர் கோயில், எதிரே புனித நீர் குளம் போன்றவை எழிலுற அமைந்துள்ளன. அண்மையில் இராஜகோபுரத்திற்காக பூமி பூஜை இனிதே நடைபெற்றது.
இந்த மலை மீது வந்தவுடனேயே, நம் செவி வழியே எப்போதும் கேட்கும் வெளியுலக இரைச்சலும் நம் மனத்தில் எப்போதும் எழும் குழப்பங்களும் ஒரு நொடியில் நீங்கி ஒருவித அமைதி நிலவுவதை உணரலாம்.
வடக்கு திசையில் இருந்து தொடர்ந்து வீசும் வாடைக்காற்றில், ஒரு வித மந்திர ஒலியை உணரலாம். இந்த வாடைக்காற்று, நம் மனத்தில் உள்ள கவலை, துக்கம், வன்மம் போன்றவற்றை அப்படியே துடைத்து எடுத்துச் சென்றுவிடுகிறது.
மலையில் உள்ள ஊற்றில் இருந்து வரும் குடிநீரை பருகினோம். ஆகா! இதுபோன்று சுவையான நீரைப் பருகி எவ்வளவு ஆண்டுகளானது!
இரண்டு மூன்று சாதுக்கள் அமைதியாக அமர்ந்து உள்ளனர். தியானம் செய்ய மிகவும் ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது. இங்கிருந்து பார்த்தால் தூரத்தில் சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்மர் ஆலயம் தெரிகிறது. வடபுறம் பார்த்தால், பொன்னை ஆறு நம் கண்களுக்கு விருந்தாகிறது.
நாங்கள் இங்கு சென்று 2 மணி நேரம் ஆனந்த அனுபவத்தில் இருந்தோம். 2 மணிநேரம், 20 நிமிடங்களாக எங்களைக் கடந்துச் சென்றது. நாங்கள் இங்கு சென்றதும், சாது குடிலில் இருந்த ஒரு வயதான அம்மா, சாப்பிடுங்கள் என்று அழைத்து, பாக்கு மட்டையில் உணவு பரிமாறினார். என்ன சுவையான உணவு! அந்த அம்மா, “பகவானை தரிசிக்க வருபவர்கள் யாரும் சாப்பிடாமல் இங்கிருந்து செல்லக்கூடாது, இன்று நிறைய பக்தர்கள் வந்தார்கள் எனவே இரண்டாவது முறை உணவு சமைத்தேன்என்று கூறினார். நண்பர் கோகுல், “இதுபோல் சுவையான உணவு உண்டு பலநாள் ஆனதுஎன்று அந்த அம்மாவிடம் கூறினார்.
எங்களின் நண்பர் திரு.பாலு அவர்கள், மிகுந்த சிரத்தையோடு இக்கோயிலை நிர்வகித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, வழிபாட்டில் கலந்துகொள்ளும் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
இங்கிருந்த 2 மணிநேரமும் எங்களுக்குள் ஏற்பட்ட ஆனந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில நாட்களாக எனக்கு ஒரு சில குழப்பங்களால் ஏற்பட்ட தொய்வானது, நான் கோயிலில் நேரத்தில் தீர்ந்து, அதற்கான வழி ஏற்பட்டது என்பதை, நான் கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் என் மனைவி கூற மிகவும் பரவசமடைந்தேன்.
மன அமைதி வேண்டுபவர்கள், ஒருமுறையேனும், காஞ்சனகிரிக்கு சென்று வருவது என் அனுபவத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டது.
அங்கிருந்து கிளம்பும்போது, என் நண்பர்களிடம் நான் கூறியது, “சிவன் மனசில என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?”
கோயிலைப் பற்றி மேலும் விவரங்களுக்கு :


























No comments:

Post a Comment