Friday, June 30, 2017

இது கண்ணீர் காலம்!

மாலை வீட்டில் இருந்து கிளம்பி, நிழற் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, “சந்துருஎன்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, என் அத்தையின் தோழி (ஏறத்தாழ 65 வயதானவர்) சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார்கள்.

அருகில் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரே செவிலியர் படிப்பு படித்துவிட்டு, எங்கள் ஊரில் உள்ள ஆசியாவின் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடத்தில் மருத்துவருக்கு உதவியாக வெகு சிறப்பாக பணிபுரிந்தவர்.

5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பணி ஓய்வு பெற்றார். அவர் அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த காலங்களில் ஆண்டுக்கு ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வருவார்அப்போதெல்லாம் அவர் எவ்வளவு மன உறுதியுடன் பேசுவார், அவரின் செயல்பாடும் எவ்வளவு தெளிவாக இருக்கும் என்பதை நானறிவேன்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி ஒரு அன்புடன் பழகுவாரோ அதே அன்பு இப்போதும்எப்போது என்னை வழியில் பார்த்தாலும், நான் கவனிக்காமல் சென்றாலும் அவர் என்னை அழைத்து பேசாமல் போகமாட்டார்.

ஆனால்…… இம்முறை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரின் பேச்சில் முன்பிருந்த உறுதி இல்லைசற்று தளர்ந்திருந்தார்நான் அவரை அக்கா என்றுதான் அழைத்து பழக்கம்.  “அக்கா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்

      அவர் கண் கலங்கியவாறே, “ஏதோ இருக்கிறேன்என்றார்.  “ஏன் அக்கா அப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்

      “மகன் வெளியூரில் பணிபுரிகிறான்என் இரண்டு அக்காக்கள் என்னுடன் இருக்கிறார்கள்மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்அவன், "திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்ல போகிறேன்உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல இயலாது என்று கூறுகிறான்என்றார்அதைக் கூறி முடிக்கும்போது, அவரையும் அறியாமல் இருவிழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

      எத்தனை ஆயிரம் அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு உறுதுணையாக இருந்து பலரின் கண்ணீரைத் துடைத்தவர். அப்போதெல்லாம் எள்ளளவும் கலங்காமல் இருந்த அந்த கருணையுள்ளம் இன்று வாழ்வின் வெறுமையால் அவர் சிந்தும் கண்ணீரை யார் துடைப்பார்?


      முதுமையே, நீ கண்ணீர் காலமா?

No comments:

Post a Comment