Saturday, July 9, 2016

மை


கடந்த வாரம் சனிக்கிழமை மாலை, சத்துவாச்சாரி தெற்கு அவென்யூ சாலை, பகுதி - 2ல் அமைந்திருக்கும் வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு நண்பர் ஒருவரைக் காண சென்றிருந்தேன்.

என் காரை நீதிமன்றத்தின் வெளியே நிறுத்திவிட்டு இறங்கிக் கொண்டிருந்தேன்.
அப்போது, நேர்த்தியாக பேண்ட், சட்டை, ஷுஅணிந்திருந்த 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் என் அருகில் வந்து, "கார் எவ்வளவு மைலேஜ் தருகிறது?" என்று கேட்டார். அதற்கு நான், "ஹைவேயில் சென்றால் 20 வரும் " என்றேன்.


உடனே அவர், "என்னுடைய காரும் மாருதி 800 தான், 1996 மாடல், 25 மைலேஜ் வரும் " என்று கூறி, அருகில் வந்து என்னுடைய காரை பார்த்து "ஓ கேஸ் கிட்டும் இருக்கிறதா?" என்று கேட்க, நான், "ஆமாம், கேஸ், பெட்ரோல் இரண்டும் இருக்கிறது" என்று கூறிவிட்டு நீதிமன்றம் நோக்கி நடந்தேன்.

அவர் என்னுடனே நடந்து வந்து, "நான் என்னுடைய காரை மெயின்டனன்ஸ் எதுவும் செய்வதில்லை ஆனாலும் நல்ல மைலேஜ் கொடுக்கிறது " என்றார்.
நான், "சரி" என்று கூறிவிட்டு நீதிமன்றத்தின் உள்ளே சென்றேன்.
நண்பரை பார்த்து விட்டு திரும்பி வரும்போது அந்த பெரியவர் இருக்கிறாரா? என வழி நெடுக தேடினேன். அவரைக் காணவில்லை. நான் அவரைத் தேட காரணம்,

அவரின்,
முதுமை
தனிமை
வெறுமை

போன்றவற்றின் பாதிப்பில், அந்த வெறுமையான சாலையில் வெறுமையான மனத்துடன் தனிமையில் இணைந்த முதுமையுடன் யாரும் தன்னுடன் பேசாமையால் யாருடனாவது ஏதாவது பேச வேண்டும் என்பதால் என்னுடன் அவர் பேசினார் என்பது என் மனத்தில் கனமாக வலித்தது.

Monday, June 20, 2016

இறைவிகள்


கவுகாத்தி செல்லும் தொடர் வண்டியில் சென்னைக்குப் பயணம் செய்துக் கொண்டிருந்தேன். மேல் படுக்கையில் அமர்ந்துக் கொண்டிருந்தேன்.

இத்தொடரியில் பயணம் செய்யும் போதெல்லாம் திருநங்கைகள் கூட்டமாக பிச்சை எடுப்பதும், 25 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கையில் ஒரு துடைப்பத்தை வைத்துக் கொண்டு நகர்ந்தவாறே தொடரியை சுத்தம் செய்துக்கொண்டு, அதற்கான கூலியை ஒவ்வொருவரிடமும் கேட்பது வழக்கம்.

இன்றும் அப்படி கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது கீழே இருக்கையில் வட மாநிலத்தவர்கள் 3 பேரும் தமிழ் பேசும் ஒருவரும் அமர்ந்து இருந்தனர்.

அந்த மூவரில் ஒருவன், வயது 35 இருக்கும், அவனிடம் அந்த பெண் தமிழிலும் இந்தியிலும் கோபம் பீறிட மிகக் கடுமையான வார்த்தைகளை சூறாவளியாய் வீசிக்கொண்டிருந்தாள். என்ன விஷயம் என்று கவனிக்கத் தொடங்கினேன்.

அந்த வட மாநிலத்தவரில் ஒருவன் அப்பெண்ணுக்கு இந்தி மொழி தெரியாது என நினைத்துக் கொண்டு,"உனக்கு பணம் வேண்டும் என்றால் உன் ஆடையை கழற்று தருகிறேன்" என்று மனிதனுக்கே உண்டான மோசமான குரூர எண்ணத்துடன் கேட்டுள்ளான்.

அப்பெண்ணுக்கு இந்தி நன்றாகத் தெரியும். உடனே அப்பெண் அருகி்ல் இருந்த திருநங்கைகளிடம் "அக்கா இவனைப் பாருங்க துணியைக் கழற்று பணம் தருகிறேன் என்று கூறி சிரிக்கிறான்" என்றாள்.

நான்கு திருநங்கைகள் அவனைச் சூழ்ந்துக் கொண்டு தமிழிலும், இந்தியிலும் கடுமையாக திட்டினார்கள்.

நான் அப்போது, சற்று திரும்பி அப்பெண்ணை பார்த்த போது, அவள் என்னிடம் "என்ன அண்ணா இன்னிக்கு திருவநந்தபுரம் டிரெயின் லேட்டா?" என்று கேட்டாள்.
நான் "ஆமாம்" என்று கூறினேன்.

அவள் என்னை அண்ணா என்று அழைக்கிறாளே? அவள் இவ்வளவு மோசமான சூழலில் இருக்கும் போது நான் அவளுக்கு ஆதரவாக எதுவும் செய்யவில்லையே என்று அத்தருணத்தில் எனக்குள் ஒரு குற்ற உணர்வு பரவியது.

தொடரி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த நேரம், அந்த திருநங்கைகளில் ஒருவள் அவனுக்கு எதிரில் எழுந்து நின்று அருகில் இருந்தவர்களை "அப்படி போங்கள்" என்று கூறி, அவனைப் பார்த்து, இந்தியில், "உனக்கு என்ன ஆடையை கழட்ட வேணும் அப்படித்தானே?, இதோ இப்போது பார்த்துக் கொள் என்று கூறி தன்னுடைய ஆடையைக் களைந்து அரை நிர்வாணமாக அவன் முன்னால் நின்று, அவனுக்கு சரியானபாடம் புகட்டினாள்.

இச்சம்பவம் நிலநடுக்கத்தை விட கடுமையான அதிர்வுகளை என்னுள் ஏற்படுத்தியது.

அன்று பகவான் கிருஷ்ணர் ஆடையைக் கொடுத்து மானம் காத்தார். இன்று இந்த திருநங்கை தன்னுடைய ஆடையை களைந்து மானம் காத்தாள் .

இந்த திருநங்கைகள் அப்போது எனக்கு இறைவிகளாக காட்சியளித்தனர்.
திருமணத்திற்கு பின்னர் பெண்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் சீரழிகிறது என்று உரக்கச் சொன்ன இறைவி திரைப்படமும் என் மனத்திரையில் ஓடத் தொடங்கியது.

கனத்த இதயத்துடன்…….  

Monday, May 30, 2016

ஆனந்தக்கூத்தனும்

சர்பத் கடையும்


     வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அருள் வாய்ந்த கங்கையம்மன் கோயில் உள்ளது.  இக்கோயில் செங்குந்த மரபினர்களால் பல நூறு ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இக்கோயிலில் உண்டியல் கிடையாது.  



     இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்கள் தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. 

            இந்த ஆண்டு மே மாதம் 24,25 மற்றும் 26ம் நாட்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  26ம் தேதி இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக “தெருக்கூத்து” நடைபெற்றது.  தெருக்கூத்து கலைஞர்கள் இரவு 9.00 மணிக்கு கோயிலுக்கு வந்துவிட்டனர்.  எந்த ஊரிலிருந்து வந்துள்ளார்கள் என்று அறிந்துக்கொள்ள நானும், என்னுடைய நண்பர்களும் இரவு 09.45 மணிக்கு சென்று பார்த்தபோது, என்னுடைய சிறுவயது நண்பன் ஆனந்தனின் “ஸ்ரீ சக்தி அம்மன்” தெருகூத்து குழுவினர் ஆரணி – பெரணமல்லூரில் இருந்து வந்திருந்தனர்.



            நான் ஆனந்தனை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.
            “எப்பொழுது கூத்து தொடங்கும்?” என கேட்டேன்.
       “எங்களுக்கு இன்னும் இரவு உணவை கோயில் நிர்வாகத்தினர் அளிக்கவில்லை” என்றான் ஆனந்தன். 


            அப்போது இரவு 09.55 மணி.  இதுதான் இன்றைய தெருகூத்து கலைஞர்களுக்கு உள்ள நிலையா என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  இவர்கள் எப்போது சாப்பிட்டு, எப்போது கூத்து தொடங்குவது?  பின்னர் நேரமானதால், நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.  இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல், என் மனம் 25 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது.

            ஆனந்தன் சிறுவயதில் எங்கள் வீட்டு அருகில் இருந்த அவனுடைய மாமா வீட்டிற்கு திருவண்ணாமலை மாவட்டம், நம்பேடு கிராமத்தில் இருந்து வந்தான்.  அப்போது அவனுக்கு வயது 12.  எனக்கு வயது 10. அவன் ஊரில் இருந்த தெருகூத்து குழுவினரைப் பார்த்து அவர்களைப்போலவே பாடுவது, ஆடுவது மற்றும் நடிப்பது என எங்களுக்குச் செய்துக் காட்டுவான். 

            ஒரு கோடைகால விடுமுறையில் சிவன் பார்வதி நாடகம் ஆனந்தன் தலைமையில் இனிதே நிறைவேறியது.  நான் சிவன் வேடமும், எங்கள் எதிர் வீட்டு இசுலாமியப் பெண் பாத்திமா பார்வதி வேடமும் கட்டினோம்.  ஆனந்தன் எங்களுக்கான வசனங்களைச் சொல்லிக் கொடுத்தான்.  ஒப்பனை செய்தான்.  நாடகத்தில் ஒரு பாடலும் பாடினான். தாளம் போடுவதற்கு பழைய வண்ணப்பூச்சி கலன்களையும், ஆணிகளையும் பயன்படுத்தினான். 

        இந்த நாடகம் நடைபெறவிருப்பதை எங்கள் தெருவில் இருந்த அனைத்து சிறுவர்களுக்கும் தெரியப்படுத்தினோம்.  ஏறக்குறைய 20 சிறுவர் சிறுமியர் மற்றும் ஒன்றிரண்டு பெரியவர்களும் இந்த நாடகத்தை வந்து பார்த்தார்கள்.  எங்களுக்கு ஒப்பனை செய்ததும் ஆனந்தனே.  நாடகம் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.  அப்போது தெரியுமா அவனுக்கு பின்னாளில் தான் ஒரு தெருக்கூத்து குழுவிற்கு வாத்தியார் ஆகப்போவதாகவோ? அதை நடத்தப்போவதாகவோ?

            பின்னர் அவன் எங்கள் ஊரில் இருந்த பால் பண்ணையில் தினக்கூலி பணியாளராக வேலைக்குச் சேர்ந்தான்.  நான் தொடர்ந்து படித்தேன். பின்னர் அவன் அவனுடைய சொந்த ஊருக்கே விவசாயம் செய்ய சென்றுவிட்டான். 

            ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர், எங்கள் ஊரில் பொங்கல் விழாவில் ஒரு தெருகூத்து நடைபெற்றபோது, நான் தற்செயலாக சென்று பார்த்துக்கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு பெண் வேடமிட்டவர், பெண்களுக்குச் சற்றும் குறையாத நளினத்தோடு ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தார்.  இவர் யார், பெண் போலவே இருக்கிறாரே? எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே? என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  பின்னர் கூத்து முடிந்ததும், அந்த பெண் வேடமிட்டவர் ஆனந்தன்தான் என அறிந்து, “என்ன ஆனந்தன், எப்போதிலிருந்து தெருகூத்து குழுவில் இணைந்தாய்?” என கேட்டன். “இப்போதுதான் ஒரு ஐந்து ஆண்டுகள் ஆனது என்றான்.”  “விவசாயம் என்ன ஆனது?” என்றேன். “விவசாயமும் கூத்தும் இரண்டற கலந்துவிட்டது” என்றான்.

           அதன் பின்னர் இப்போதுதான் நான் ஆனந்தனைப் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து, ஒரு திங்கள் கிழமை காலை 7.30 மணிக்கு ஆனந்தனை செல்பேசியில் அழைத்துப் பேசினேன். 

            இரண்டு பிள்ளைகள் என்றான்.  பெரிய பெண் பிள்ளை 10ம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், ஆரணி-பெரணமல்லூரில் வசித்து வருவதாகவும், மாதம் 15 நாட்களுக்கு மேல் கூத்து நடத்த நிகழ்ச்சிகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், தான் இப்போது இக்குழுவின் வாத்தியார் எனவும், ஒரு கூத்திற்கு தோராயமாக, தொலைவுக்கு ஏற்றாற்போல் ரூ.15,000/-லிருந்து ரூ.25,000/- பெறுவதாகவும் சொன்னான்.  தற்போது கூத்துதான் முழுநேர பணி எனவும் கூறினான்.  இத்தகவல்களைக் கேட்டபோது, ஆனந்தனை திருவிழாவில் பார்த்தபோது என் மனத்தில் நான் கொண்ட “என்ன இப்படி கண்கள் சுற்றிலும் கரு வளையம் சூழ்ந்து, தலை முடியெல்லாம் கொட்டிவிட்டுள்ளதே? அவன் வாழ்வையும் இருள் சூழ்ந்துக் கொண்டதோ?” என்ற கணிப்பினை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்.    

    பழங்கால கலைகளின் மேல் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தை தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் சிதைத்தும், மீண்டும் மக்கள் இக்கலைகளின்மேல் குறிப்பாக தெருக்கூத்தின்மேல் மீண்டும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். 

            பழங்கால கலைகளை வளர்க்க, அழிந்துவிடாமல் காக்க ஆனந்தனைப்போல் எத்தனை பேர் தங்கள் வாழ்வை அர்பணித்துள்ளனர் என நினைத்தபோது, திருவிழாவில் நான் கண்ட மற்றுறொரு காட்சியும் பழங்கால உணவுப் பழக்கத்தின் மேல் மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதைக் காண நேர்ந்தது.  



          அது ஒரு சர்பத் கடை.  55 வயது மதிக்கத்தக்க பெரியவர்  ஒவ்வொரு ஆண்டும் திருவிழா தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வந்து கடை போடுவார்.  திருவிழா முடிந்து 10 நாட்கள் வரை கடை இருக்கும்.  இந்த 20 நாட்களும் குறைந்த விலையில் விதவிதமான சர்பத் போட்டுக் கொடுப்பார்.

           இந்த ஆண்டும் அந்த சர்பத் கடையில் கட்டுக்கடங்காத கூட்டம்.  குறைந்தது 15லிருந்து 20 நிமிடங்கள் காத்திருந்து, முண்டியடித்து மக்கள் சர்பத் வாங்கி குடித்துச் சென்றனர்.  நானும் என் நண்பர்களும் 10 நிமிடங்கள் காத்திருந்து, ரூ.10/-க்கு நன்னாரி சர்பத் வாங்கிக் குடித்தோம்.

               சர்பத் கடையில் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் பிள்ளைகளும் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் சர்பத் போட்டு கொடுத்தனர்.  அந்தப் பெண்மணியிடம், உங்கள் கடையில் ஒரு பெரியவர் இருப்பாரே அவர் எங்கே?” என்று கேட்டேன்.  அதற்கு அந்தப் பெண்மணி, “அவர் என்னுடைய வீட்டுக்காரர்தான். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார், அதோ அந்த படத்தில் இருக்கிறார்” என்று கடையில் பூமாலை போடப்பட்டு இருந்த அந்த பெரியவரின் படத்தைக் காண்பித்தார். 


அந்த படத்தைப் பார்த்தபோது, அந்த பெரியவர் தன்னுடைய மேற்பார்வையில் இப்போதும் சர்பத் வியாபாரம் செய்வதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.  திருவிழாவில் மற்ற பன்னாட்டு குளிர்பானங்களின் வியாபாரத்தைக் காட்டிலும் இந்த சர்பத் கடையில் வியாபாரம் அபாரம்.

          நம் மக்கள் பாரம்பரிய கலையையும், உணவையும் ஒதுக்கவில்லை.  அவர்களுக்கு அவை மறுக்கப்படுகிறன.  பன்னாட்டு நிறுவனங்களாலும், ஊடகங்களாலும் மறைக்கப்படுகிறது.  இதனாலேயே அவர்கள், என்ன கிடைக்கிறதோ அதை பயன்படுத்தும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர்.

     இந்நிலை மாறும் என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகள் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தது என்றால் மிகையில்லை.




Wednesday, March 2, 2016

| குடை ஆரஞ்சு |


     வேலூர் மாவட்டம் வள்ளி மலை புகழ் வாய்ந்த முருகன் கோயில்.

     வருடந்தோறும் மாசி மாதத்தில் இங்கு 7 நாட்கள் நடைபெறும் தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

     இந்த திருவிழாவிற்கு சென்றிருந்த போது , சாலையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். அவர்களுக்கு இணையாக எங்கு பார்த்தாலும் அன்னதானமும் நீர்,மோர் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

     சாலையில் தேங்காயை உருட்டி 10 அடிக்கு ஒரு முறை மக்கள் கீழே விழுந்து வணங்கியபடி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தி சென்றனர்.

     சாலை ஓரத்தில் மூன்று சக்கர தானியங்கி வண்டியில் ஆரஞ்சு பழத்தை மலைபோல் குவித்து விற்றுக் கொண்டிருந்தனர்.

     அவர்களில் ஒருவர் நான்கு ஆரஞ்சு பழங்களை உறித்து அருகில் இருந்து உடைத்துக் கொண்டு வந்த மரக்கிளையில் செருகி "குடை ஆரஞ்ச் ""குடை ஆரஞ்ச் " என சத்தமாக விற்கத் தொடங்கினார்.

     அதுவரை மந்தமாக இருந்த விற்பனை விறுவிறுப்படைந்தது. அரை மணி நேரத்தில் பாதியளவு ஆரஞ்சு பழங்களை விற்று விட்டனர்.

     குடைமிளகாய் தெரியும். குடை ஆரஞ்சு ?

  இது தான் வித்தியாசமாக எதையாவது சொன்னால் மனித மனம் அதன் பால் ஈர்க்கப்பட்டு அது உண்மை என்று நம்பும் தன்மைக்கு எடுத்துக் காட்டு.

     இங்கு பழங்களை விற்றவர் களும் வாங்கியவர்களும் கிராமத்து மனிதர்கள்.

   இதே உளவியல் துணுக்கத்தைக் கொண்டே நம் உடலுக்கு இம்மியளவும் நன்மை புரியா பல பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் நடிகர்களைக் கொண்டும், விளையாட்டு வீரர்களைக் கொண்டும் விற்பனை செய்கின்றன.

 எண்ணெய் செக்கில் தேங்காய் எண்ணெய்யை வாங்கி பயன்படுத்துவதை நிறுத்தினோம், முடி உதிர்வதும் நரைப்பதும் தொடங்கியது.

    கடலை எண்ணெய் சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படும் என பயமுறுத்தப்பட்டு அதை திருத்தினோம், மூட்டு வலியும் இருதய சிகிச்சை மையங்களும் பெருகின.

   குடை ஆரஞ்சு என அந்த வியாபாரி விற்று அதை மக்கள் வாங்கி உண்டதால் அவர்கள் உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

 ஆனால் விளம்பரங்களைக் கண்டு ஆராயாமல் நாம் வாங்கி பயன்படுத்தும் பொருட்களால் நம் உடல் நிலை கெடுவதோடு அல்லாமல் நம் அடுத்த தலைமுறையின் உடல் நிலையும் கெடுகிறது. சிந்திப்போம்.


ரியாலிட்டி(Reel) T.V.Show


            திருவனந்தபுரம் - சென்னை விரைவு வண்டியில் சென்னைக்கு பயணம் செய்துக்கொண்டிருந்தேன்.

            மலையாளம் பேசும் ஒரு ஒரு கணவன் - மனைவி அவர்களின் 7 வயது மகள் மற்றும் ஒரு தமிழ் குடும்பம் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோ பற்றி வெகு நேரமாக பேசிக் கொண்டிருந்தனர்.

            இதில் உச்ச கட்ட நிகழ்வாக ஒரு மலையாள பாடலை செல்பேசியில் ஒலிக்கச் செய்து அந்த 7 வயது பெண் குழந்தையை ஆடச் சொல்ல, அந்தக் குழந்தையும் ஆடத் தொடங்கியது.

            இடையிடையே அந்தக் குழந்தையின் தாயார், நன்றாக சிரித்துக் கொண்டே ஆட வேண்டும், அப்போதுதான் Audiance support கிடைக்கும்”, “Camera -வை பார்த்து ஆட வேண்டும் என கட்டளைகள் பிறப்பித்துக்கொண்டே இருந்தார்.

            2008-ம் ஆண்டில் ஒரு தொலைக்காட்சி சேனலில் இது போன்ற ஒரு நிகழ்சியில் நான் கலந்துக் கொண்ட பின்னர், இவை அனைத்தும் முன்னரே திட்டமிடப்பட்டு படமாக்கப்படுகிறது என்பதும், அந்த நிகழ்ச்சியை தொகுப்பவர் சர்கஸ் ரிங்மாஸ்டர் போல் செயல்படுவதும் எனக்குத் தெரிந்தது.

            முட்டாள்தனத்திற்கு டிமாண்ட் உள்ளவரை சப்ளை செய்பவர்கள் தொடர்ந்து சப்ளை செய்வார்கள் என என் நண்பர் கூறியது என் நினைவுக்கு வந்தது.

            சற்று நேரத்தில் காற்றில் உருமி சத்தம் என் செவிகளை வந்தடைய, தொடர் வண்டியின் சன்னல் வழியே வெளியே பார்த்தேன்.  அங்கு சாலையில் கழைக்கூத்தாடி தன் இளவயது பெண் குழந்தையை கயிற்றின் மேல், தன் வயிற்றுப் பிழைப்புக்காக நடக்க வைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

            அவன் செய்வதிலாவது ஓர் அர்த்தம் இருக்கிறது. பெற்றோரே நீங்கள் செய்வது எதற்காக?


மருதை, மதிரை, மதுரை



     மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் தொடர்வண்டியில் பயணம் செய்துக்கொண்டிருந்தேன்.

     முன்னிரவு சரியாக தூங்காததால் சற்று கண்ணயர்ந்தேன். அப்போது மதுரையை சேர்ந்த இரண்டு ஆண்களும்ஒரு பெண்மணியும் கொண்டிருந்தனர்.

     தொடர்வண்டி பயணத்தில் என் தொடர்ச்சியான தூக்கத்தை அவர்களின் பேச்சு தொந்தரவு செய்த போதும் கண்களை மூடிக் கொண்டே சற்று கவனிக்கத் தொடங்கினேன்.

     அவர்களின் உரையாடல் சொத்து வாங்குவது விற்பது பத்திர பதிவு போன்றவற்றை சுற்றியே இருந்தது.

  குறிப்பாக மதுரை தமிழில் அவர்களின் உரையாடல் இருந்தது. "கணக்காப்பிள்ளை ",வையையாறு", "பத்திரம் பதிஞ்சிடலாம், "பொம்பள புள்ளைங்க " , "அங்கிட்டு இங்கிட்டு " , "முடிச்சு விட்டிடலாம்", "வாராங்க", "அப்படித்தே", "அடுத்தாப்பல", "கெட்டிக்காரப் பைய" இப்படி மதுரை பேச்சு வழக்கு தேமதுரதமிழோசையாய் என் செவிகளைத் தொட்டதோடு நில்லாமல் என் சிந்தையையும் தொட்டது. இடையிடையே "அவார்ட்டு", போன்ற இன்ற பிற ஆங்கிலச் சொற்களும் எதிரொலிக்கத் தவரவில்லை. 

      இந்த இரண்டு ஆண்களின் உரையாடலைத்தவிர்த்து, அந்த பெண்மணியின் வார்த்தையில் மட்டும் சென்னை பேச்சு வழக்கு மிகுந்திருந்தது.  அவர் தன்னுடைய ஊர் உசிலம்பட்டி என்றால்.  வெகு ஆண்டுகளுக்கு முன்னரே சென்னைக்கு வந்துவிட்டதாக தன் உரையாடலின் நடுவே கூறினார்.

      இப்படி சுவாரசியம் கூடிக் கொண்டே சென்றபோது, அந்த இரண்டு ஆண்களில் ஒருவருக்கு செல்பேசியில் அழைப்புவந்தபோது, அஸ்லாம்மு அலைக்கும்” என்றதும், என்னையுமறியாமல் நான் கண் திறந்து அவரை பார்த்தேன்.  அவர் ஒரு இசுலாமியர்.  50 வயது மதிக்கத்தக்கவர்.  மற்றொரு ஆண் நபரைப் பார்த்தேன் அவர் 70 வயது மதிக்கத்தக்கவர்.  நரைத்த தலைமுடி. நல்ல திடகாத்திரமான உடல், மதுரை மண்ணின் அடையாளமான பெரிய மீசை. அந்த பெண்மணியைப் பார்த்தேன்.  அவர் 40 வயது மதிக்கத்க்கவர்.

      ஒரு இசுலாமியர் மதுரை மண்ணிலேயே வாழ்வதால் அந்த மண்ணின் பேச்சு வழக்கை சிதைக்காமல் பேசுகிறார்.  அந்த முதியவர் மதுரையிலேயே வாழ்வதால் அவரும் அப்படியே பேசுகிறார்.  ஆனால், வெகு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னைக்கு வந்து தங்கிவிட்ட ஒரே காரணத்தினால் அந்த பெண்மணி தன்னுடைய மண்ணின் பேச்சு வழக்கை திரித்து சென்னை பேச்சு வழக்கோடு பேசுகிறார்.

      புலம்பெயர்தல் எவ்வாறு கலாச்சாரத்தை மட்டுமல்லாமல் பேச்சு வழக்கையும் திரித்து விடுகிறது என்பதை கண்கூடாகக் கண்டேன். 

      தொடர்வண்டி சென்னையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ஆர்வமிகுதியால் அந்த முதியவரிடம் நான் உங்கள் பேச்சை சில மணிநேரங்களாக தொடர்ந்து கவனித்து வருகிறேன், உங்கள் பேச்சைப் பற்றி ஒரு கட்டுரையை இதோ என் செல்பேசியில் எழுதியும் வருகிறேன் என்று கூறினேன்.  அவர் மிகவும் மகிழ்ந்தார்.  நான் என்னை அறிமுகம் செய்துக் கொண்டு, அவரைப் பற்றி கேட்டபோது, அவர் ஊர் நாட்டாண்மையாக இருந்து, பின்னர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்று என்னிடம் கூறினார்.  தற்போதும் பஞ்சாயத்து செய்வதை தொடர்வதாகக் கூறினார்.  தற்போது தாம்பரத்திற்கு ஒரு பஞ்சாயத்து செய்வதற்காகச் செல்வதாகவும் கூறினார்.  அவர் அவ்வாறு கூறக் கூற, திரைப்படங்களில் நாம் காணும் மதுரை மண்ணின் பஞ்சாயத்து தலைவர்கள் என் மனத்திரையில் ஒரு கணம் வந்து போனார்கள்.  அந்த இசுலாமியர் மதுரையில் செங்கல் சூளை வியாபாரம் செய்வதாகவும், சென்னையில் ஒரு பிரபல செல்பேசி கடைக்கு தன்னுடைய இடத்தை வாடகைக்கு விட்டுள்ளதாகவும் கூறினார்.  அந்த முதியவரின் செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டு, மதுரைக்கு வரும்போது சந்திக்கிறேன் என்று விடைபெற்றேன்.  அவரும், என்னுடைய செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.

      அந்த முதியவரும், இசுலாமியரும் கண்ணியம் குறையாமல் பேசிய மொழிநடை, மதுரை மண்ணின் பேச்சு நடை என்னை மெய்சிலிர்க்க வைத்தது.

     


பயணச்சீட்டு


பேருந்தில் இருந்து நான் செல்ல வேண்டிய இடம் வந்து
இறங்கியவுடன் அந்த பயணச்சீட்டை குப்பைத் தொட்டியில்
வீசி எறிந்தேன்.

பேருந்தில் பயணம் செய்யும்வரை தேவைப்பட்ட
அந்த பயணச்சீட்டு இப்போது வெறும் குப்பையானது.


பிறப்பு என்ற நிறுத்தத்தில் ஏறி,
இறப்பு என்ற திருத்தத்தில் இறங்கியுடன்
தேவையில்லாமல் போகிறதே 
நம் உடல்!

தொடர்வண்டி தொல்லைகள்


திருநங்கைகள்
&
பிச்சைக்காரர்கள் போர்வையில் சோம்பேறிகள்

      தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், ஆந்திர மாநிலத்திற்கும் தொடர் வண்டியில் பயணம் செய்கையில், நாம் அன்றாடம் காணும் காட்சி, திருநங்கைகள் தொடர் வண்டியில் பிச்சை எடுப்பது. 

      குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் தொடர்வண்டிகளில் இவர்கள் நாள்தோறும் வந்து, அதிகாரத் தோரணையோடு தூங்கிக்கொண்டிருப்பவர்களையும் தட்டி, அதட்டி எழுப்பி பணம் வசூலிக்கின்றனர் (பிச்சை எடுக்கின்றனர் என கூற அவசியம் ஏற்படவில்லை).  இவர்கள் கேட்கும் குறைந்தபட்ச தொகை ரூ.10/-.

      நான் இத்தகைய தொடர்வண்டிகளில் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் பயணம் செய்யும்போது, முதலில் என்னிடமும் பணம் கேட்கத் தொடங்கினார்கள்.  பின்னர், நான் தொடர்ச்சியாக பயணம் செய்வதை அறிந்துக்கொண்ட அவர்கள், என்னிடம் பணம் கேட்பதில்லை. இவ்ர்கள் அனைவரும் நன்றாக இந்தி மொழியை பேசி அவர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர்.  அதில் ஒரு திருநங்கை வயது 40க்கு மேல் இருக்கும், அவர் வடமாநிலத்தவரிடம் பேசும்போது, கோயிலில் திருவிழா நடக்க இருக்கிறது அதற்கு பணம் கொடுங்கள் என்று (இந்தி மொழியில்) கூறியே பணம் வசூலிக்கிறார். மற்றொரு திருநங்கை வயது 50க்கு மேல் இருக்கும், அவர் சற்றே அதிகாரத் தோரணையை குறைத்து பணம் வசூலிக்கிறார்.

      இவர்களைத் தவிர்த்து, கைக்குழந்தைகள், 6லிருந்து 10 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளை ஆகியோரை உடன் அழைத்து வந்து பிச்சையெடுக்கும் சோம்பேறிகள், ஒரு இசுலாமிய பெண்மணி வயது 30க்குள் இருக்கும். ஆரோக்கியமாக இருக்கிறார்.  இசுலாமியரின் பாரம்பரிய உடையை அணிந்துக்கொண்டு, தன்னுடைய 10 வயது மகனுக்கு இசுலாமிய பாரம்பரிய உடையை அணிவித்து, குரானிலிருந்து (உருது மொழியில்) ஏதோ சொல்லிக்கொண்டே பிச்சை எடுக்க வைக்கிறார்.

      இராஜஸ்தானை சேர்ந்த ஒரு பெண்மணியும் தொடர்ச்சியாக தன்னுடைய 10 வயது பெண் பிள்ளையை உடன் அழைத்து வந்து பிச்சை எடுக்கிறார்.


      இவர்களைப் பார்த்து மனம் வெதும்பியபோது, பார்வையற்றவர்கள் தொடர்வண்டியில் விளையாட்டுப் பொருட்கள், கடலை மிட்டாய் போன்றவற்றை விற்பதும், 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தன்னுடைய ஒரு கால் இல்லாத நிலையிலும், ஊன்றுகோல் உதவியுடன் இதுபோன்ற பொருட்களை விற்று உழைத்து சம்பாதிப்பதும் இந்தியா சோம்பேறிகள் நாடு அல்ல என்பதை பறைசாற்றுகிறது.

புவி வெப்பமயமாதல்


கடவுள் கொடுத்த
வண்ணப்படத்தை
மனிதன் கறுப்பு வெள்ளை

படமாக்கிக் கொண்டிருக்கிறான்

வடகிழக்கு பருவ (வறுமை) மழை



     இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் இருந்து நாள்தோறும் தமிழ் நாட்டிற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் (கட்ட வேலை, ரயில் பாதை அமைப்பு இன்னும் பிற) கூலி வேலைக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், அங்கிருந்து கோயம்புத்தூருக்கும் பயணம் செய்கின்றனர்.

   சென்னை இரயில் நிலையத்திலும், கோயம்புத்தூர் இரயில் நிலையத்திலும் இதனை நாள்தோறும் காணலாம். அப்படி தமிழ்நாட்டிற்காக உழைக்க வருபவர்களுக்கு பயணம் செய்ய போதுமான இரயில் வசதி இல்லை.  குறிப்பாக கவுகாத்தியிலிருந்து எர்ணாகுளம், திருவனந்தபுரம் செல்லும் இரயில் வண்டி ஒன்வொன்றிலும் 5 மடங்கு அதிகமாக பயணிக்கின்றனர்.  இரண்டாம் வகுப்பு படுக்கை அறை வசதி கொண்ட பெட்டிகளில் 100 பேர் பயணம் செய்யலாம்.  ஆனால், குறைந்தது 400 லிருந்து 500 பேர் இதில் பயணம் செய்கின்றனர்.  ஒவ்வொரு படுக்கையிலும் குறைந்தது 2 அல்லது 3 பேர் படுத்துக்கொண்டும், உட்கார்ந்துக்கொண்டும் மிகக் கொடுமையான பயணம் மேற்கொள்கின்றனர்.

    ஒரு பெட்டியிலிருந்து மற்றொரு பெட்டிக்கு பயணம் செய்யும் இடைப்பட்ட பகுதியிலும், ஏறும் இறங்கும் பகுதியிலும் மலைபோல் தங்களது உடைமைகளை குவித்து அதன் மேல் பலர் அமர்ந்தும் பயணம் செய்கின்றனர். 

   இதனால், அப்பெட்டிகளில் துர்நாற்றம் வீசுவதோடு, போதுமான குடிநீர், கழிவறை வசதி இல்லாமல் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.  இவ்வளவு பேர் பயணம் செய்வதால், ஒவ்வொரு பெட்டியிலும் நிரப்பப்டும் தண்ணீர் மிக குறைந்த நேரத்திலேயே தீர்ந்துவிடுவதும் வாடிக்கையாகிவிடுகிறது.

   முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் இன்னும் கொடுமை.  போர்வையால் ஊஞ்சல் கட்டி அதில் படுத்துக்கொண்டு பயணம் செய்கின்றனர். 


 அவர்கள் விடுமுறைக்காக தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்யும்போதும் இதே நிலைமைதான்.  இது அந்த இரயில்களில் பணிபுரியும் பயணச்சீட்டு பரிசோதகர் முதற்கொண்டு இரயில் நிலைய அதிகாரிகளுக்கும் தெரிந்தும், அவர்களுக்காக அதிக எண்ணிக்கையில் பெட்டிகளை இணைப்பதோ அல்லது மேலும் பல இரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதோ செய்யாமல் நம் மாநில வளர்ச்சிக்காக தங்கள் ஊர், உறவுகளை விட்டு விட்டு உழைக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களை நாம் மனிதராகவே மதிக்காமல் நடந்துக்கொள்வது நியாயமா?