Friday, June 30, 2017

இது கண்ணீர் காலம்!

மாலை வீட்டில் இருந்து கிளம்பி, நிழற் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, “சந்துருஎன்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தபோது, என் அத்தையின் தோழி (ஏறத்தாழ 65 வயதானவர்) சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு என்னை அழைத்தார்கள்.

அருகில் சென்று சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்அவர் 30 ஆண்டுகளுக்கு முன்னரே செவிலியர் படிப்பு படித்துவிட்டு, எங்கள் ஊரில் உள்ள ஆசியாவின் புகழ்பெற்ற ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை கூடத்தில் மருத்துவருக்கு உதவியாக வெகு சிறப்பாக பணிபுரிந்தவர்.

5 ஆண்டுகளுக்கு முன்னர்தான் பணி ஓய்வு பெற்றார். அவர் அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த காலங்களில் ஆண்டுக்கு ஓரிரு முறை எங்கள் வீட்டிற்கு வருவார்அப்போதெல்லாம் அவர் எவ்வளவு மன உறுதியுடன் பேசுவார், அவரின் செயல்பாடும் எவ்வளவு தெளிவாக இருக்கும் என்பதை நானறிவேன்.

30 ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி ஒரு அன்புடன் பழகுவாரோ அதே அன்பு இப்போதும்எப்போது என்னை வழியில் பார்த்தாலும், நான் கவனிக்காமல் சென்றாலும் அவர் என்னை அழைத்து பேசாமல் போகமாட்டார்.

ஆனால்…… இம்முறை அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, அவரின் பேச்சில் முன்பிருந்த உறுதி இல்லைசற்று தளர்ந்திருந்தார்நான் அவரை அக்கா என்றுதான் அழைத்து பழக்கம்.  “அக்கா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன்

      அவர் கண் கலங்கியவாறே, “ஏதோ இருக்கிறேன்என்றார்.  “ஏன் அக்கா அப்படி சொல்கிறீர்கள்?” என்று கேட்டேன்

      “மகன் வெளியூரில் பணிபுரிகிறான்என் இரண்டு அக்காக்கள் என்னுடன் இருக்கிறார்கள்மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும்அவன், "திருமணம் முடிந்தவுடன் வெளிநாடு செல்ல போகிறேன்உங்களை என்னுடன் அழைத்துச் செல்ல இயலாது என்று கூறுகிறான்என்றார்அதைக் கூறி முடிக்கும்போது, அவரையும் அறியாமல் இருவிழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

      எத்தனை ஆயிரம் அறுவை சிகிச்சையில் மருத்துவருக்கு உறுதுணையாக இருந்து பலரின் கண்ணீரைத் துடைத்தவர். அப்போதெல்லாம் எள்ளளவும் கலங்காமல் இருந்த அந்த கருணையுள்ளம் இன்று வாழ்வின் வெறுமையால் அவர் சிந்தும் கண்ணீரை யார் துடைப்பார்?


      முதுமையே, நீ கண்ணீர் காலமா?

மதம் பிடிக்காத நட்பு

ஒவ்வொரு ஆண்டும் நோன்புப் பெருவிழா நாளில் என் ஆருயிர் பள்ளித் தோழன் என் இல்லத்திற்கு பிரியாணி கொண்டு வந்து அன்புடன் கொடுப்பது வழக்கம்.
இந்த ஆண்டும் வந்திருந்தான். நண்பகல் செல்பேசியில் தொடர்பு கொண்டு, கொஞ்ச நேரம் காத்திருக்க வேண்டும் என்றும், சற்று தாமதம் ஆகிவிட்டது என்றும் வருத்தம் தெரிவித்தான்.
3.30 மணிக்கு வந்திருந்தான். அவன் எப்போது என்னை சந்தித்தாலும், மாநில, தேசிய, உலக அரசியல் பற்றி பேசாமல் செல்லமாட்டான்.
இன்றும் அப்படியே, வந்தார், GDP, மாநில அரசியல், Donald Trump போன்று பலவற்றை பேசினான்.
அவன் பேச்சில் மோடி எதிர்ப்பும் மேலோங்கியது. ஏன் இப்படி கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள் என்று எனக்கு வியப்பாக இருந்தது.
அவன் என் இல்லத்திற்குள் வரும் போது, சேரனின் "பொக்கிஷம்" திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் ஒரு இசுலாமிய பெரியவர் பேசிய வசனம், "மதமா? மனிதனா? என்று ஒரு நிலை வந்தால், நான் மனிதன்தான் என்பேன்" என்பார். எங்கள் நட்பிற்கும் இது என்ன ஒரு அருமையான பொருத்தம்!
அவனின் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட வேற்று நபர்கள் நானும் என்னுடைய மற்றொரு நண்பனும்தான். அவனுடைய மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், வேறு யாருக்கும் அவனின் இல்லத்திற்குள் செல்ல அனுமதியில்லை.

பின்னர் எங்கள் பள்ளி கால நினைவுகளை அசைபோட்டோம். மாநில, தேசிய மற்றும் உலக அரசியல் நிலவரம் போன்றவற்றில் எங்களுக்கு எப்போதும் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பள்ளியில் தொடங்கி இன்றுவரை தொடரும் உன்னதமான நட்பில் இம்மியளவும் எவ்வித முரண்களும் இல்லை என்பதே உண்மை.

Saturday, June 10, 2017

“சிவன் மனசுல என்ன இருக்கோ? யாருக்குத் தெரியும்?”


சிவன் மனசுல என்ன இருக்கோ? 
யாருக்குத் தெரியும்?”
சமீபத்தில் இந்த வசனத்தை அறியாதவர்களே தமிழ்நாட்டில் இல்லை எனலாம். ஆம். பாகுபலி முதல் பாகத்தில் இடம்பெற்ற வசனம். பாகுபலி இரண்டாம் பாகம் முடியும்போதும் திரையில் இந்த வசனம் எதிரொலிக்கும். இந்த வசனம் எவ்வளவு நிதர்சனமான உண்மை!
என்னுடைய உடன் பிறவா சகோதரரும் நலம் விரும்பியுமான திரு.DMag சரவணன் மற்றும் நண்பர் கோகுல் அவர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தபோது, “காஞ்சனகிரிகோயிலுக்கு செல்ல முடிவு செய்து கிளம்பினோம்.
காஞ்சனகிரி வரலாறு: 
 ----------------------------------
திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற திருத்தலமான திருவல்லம்தற்போது திருவலம் என அழைக்கப்படுகிறது. இங்கு சிவபெருமான் வில்வநாதர் என்னும் திருப்பெயரிலும், அம்பாள் பாலகுஜாம்பாள் (இளமுலை நாயகி அம்மன்) என்னும் திருப்பெயரிலும் எழுந்தருளி மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இத்திருத்தலத்திற்கு காஞ்சனகிரி மலையில் இருந்து தினந்தோறும் புனித நீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது வழக்கமாக இருந்தது. இம்மலையில், காஞ்சன் என்னும் அரக்கன் வாழ்ந்து வந்தான். புனித நீர் எடுக்கச் செல்லும் கோயில் அர்ச்சகரை தினந்தோறும் துன்புறுத்தி வந்தான். ஒருநாள் இது எல்லைமீறவே, வில்வநாதீஸ்வரர் நந்தியம்பெருமானை அனுப்பி காஞ்சனை வதம் செய்தார் என்பது வரலாறு.
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட கஞ்சனின் வேண்டுகோளுக்கிணங்க அவன் தவம் புரிந்த மலை கஞ்சனகிரி எனப் பெயர் பெற்றது. அவனுக்குத் திருக்காட்சித் தந்து மோட்சமளித்த இடம் கஞ்சன ஏரி எனவும், சிரசு விழுந்த இடம் சீக்கராஜபுரம் எனவும், மார்பு விழுந்த இடம் மாவேரி எனவும், வலது கால் விழுந்த இடம் வடகால் எனவும், தென்திசையில் இடது கால் விழுந்த இடம் தெங்கால் எனவும், மணிக்கட்டு விழுந்த இடம் மணியம்பட்டு எனவும், குடல் விழுந்த இடம் குகையநல்லூர் எனவும், நரம்பு முதலான பகுதிகள் விழுந்த இடம் நரசிங்கபுரம் எனவும், மார்பு பகுதியின் சில பாகங்கள் விழுந்த இடம் மருதம்பாக்கம் எனவும், கபாலத்தில் உள்ள நெற்றிப் பகுதி (லாடம்) அல்லது புருவ மத்தி விழுந்த இடம் இலாலாப்பேட்டை எனவும் பெயர் பெற்றன. அசுரனது குருதித் துளிகள் சிந்திய இடங்களில் அவை உருவமற்ற சுயம்பு லிங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. இவ்வாறு காஞ்சகிரியில் மொத்தம் 1008-க்கும் மேற்பட்ட லிங்கங்கள் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அவற்றை 1008 சுயம்பு சிவலிங்கங்களாக கருதி மக்கள் வழிபடுகின்றனர்.
வேலூரில் இருந்து இராணிப்பேட்டை பெல் தொழிற்சாலையை கடந்து சென்றால், 2 கி.மீ. தொலைவில் இலாலாப்பேட்டை உள்ளது. இங்கிருந்து 1.5 கி.மீ. தொலைவில் நீண்ட நெடிய மலைப்பாதையில் 10 நிமிடம் பயணம் செய்தால் காஞ்சனகிரி மலை உள்ளது.
இங்கு சுயம்பாக சிவபெருமான் அருள்பாலிக்கிறார். எதிரே, 1891ல் பிறந்து 1973ல் முக்தியடைந்த ஸ்ரீலஸ்ரீ சிவஞான சுவாமிகளின் ஜீவ சமாதியும் அமைந்துள்ளது. அருகில் சப்த கன்னியர் கோயில். ஒரு பெரிய சிவ லிங்கம், ஆஞ்சநேயர் கோயில், வள்ளி தெய்வானை சமேத முருகர் கோயில், நாகலிங்க மரத்தடியில் நாகராஜர் கோயில், எதிரே புனித நீர் குளம் போன்றவை எழிலுற அமைந்துள்ளன. அண்மையில் இராஜகோபுரத்திற்காக பூமி பூஜை இனிதே நடைபெற்றது.
இந்த மலை மீது வந்தவுடனேயே, நம் செவி வழியே எப்போதும் கேட்கும் வெளியுலக இரைச்சலும் நம் மனத்தில் எப்போதும் எழும் குழப்பங்களும் ஒரு நொடியில் நீங்கி ஒருவித அமைதி நிலவுவதை உணரலாம்.
வடக்கு திசையில் இருந்து தொடர்ந்து வீசும் வாடைக்காற்றில், ஒரு வித மந்திர ஒலியை உணரலாம். இந்த வாடைக்காற்று, நம் மனத்தில் உள்ள கவலை, துக்கம், வன்மம் போன்றவற்றை அப்படியே துடைத்து எடுத்துச் சென்றுவிடுகிறது.
மலையில் உள்ள ஊற்றில் இருந்து வரும் குடிநீரை பருகினோம். ஆகா! இதுபோன்று சுவையான நீரைப் பருகி எவ்வளவு ஆண்டுகளானது!
இரண்டு மூன்று சாதுக்கள் அமைதியாக அமர்ந்து உள்ளனர். தியானம் செய்ய மிகவும் ஏற்ற சூழல் இங்கு நிலவுகிறது. இங்கிருந்து பார்த்தால் தூரத்தில் சோளிங்கர் அருள்மிகு லஷ்மி நரசிம்மர் ஆலயம் தெரிகிறது. வடபுறம் பார்த்தால், பொன்னை ஆறு நம் கண்களுக்கு விருந்தாகிறது.
நாங்கள் இங்கு சென்று 2 மணி நேரம் ஆனந்த அனுபவத்தில் இருந்தோம். 2 மணிநேரம், 20 நிமிடங்களாக எங்களைக் கடந்துச் சென்றது. நாங்கள் இங்கு சென்றதும், சாது குடிலில் இருந்த ஒரு வயதான அம்மா, சாப்பிடுங்கள் என்று அழைத்து, பாக்கு மட்டையில் உணவு பரிமாறினார். என்ன சுவையான உணவு! அந்த அம்மா, “பகவானை தரிசிக்க வருபவர்கள் யாரும் சாப்பிடாமல் இங்கிருந்து செல்லக்கூடாது, இன்று நிறைய பக்தர்கள் வந்தார்கள் எனவே இரண்டாவது முறை உணவு சமைத்தேன்என்று கூறினார். நண்பர் கோகுல், “இதுபோல் சுவையான உணவு உண்டு பலநாள் ஆனதுஎன்று அந்த அம்மாவிடம் கூறினார்.
எங்களின் நண்பர் திரு.பாலு அவர்கள், மிகுந்த சிரத்தையோடு இக்கோயிலை நிர்வகித்து வருகிறார். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, வழிபாட்டில் கலந்துகொள்ளும் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்படுகிறது.
இங்கிருந்த 2 மணிநேரமும் எங்களுக்குள் ஏற்பட்ட ஆனந்த அனுபவத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. சில நாட்களாக எனக்கு ஒரு சில குழப்பங்களால் ஏற்பட்ட தொய்வானது, நான் கோயிலில் நேரத்தில் தீர்ந்து, அதற்கான வழி ஏற்பட்டது என்பதை, நான் கோயிலில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் என் மனைவி கூற மிகவும் பரவசமடைந்தேன்.
மன அமைதி வேண்டுபவர்கள், ஒருமுறையேனும், காஞ்சனகிரிக்கு சென்று வருவது என் அனுபவத்தில் இருந்து நான் தெரிந்துகொண்டது.
அங்கிருந்து கிளம்பும்போது, என் நண்பர்களிடம் நான் கூறியது, “சிவன் மனசில என்ன இருக்கோ யாருக்கு தெரியும்?”
கோயிலைப் பற்றி மேலும் விவரங்களுக்கு :