Monday, May 30, 2016

ஆனந்தக்கூத்தனும்

சர்பத் கடையும்


     வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அருள் வாய்ந்த கங்கையம்மன் கோயில் உள்ளது.  இக்கோயில் செங்குந்த மரபினர்களால் பல நூறு ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.  இக்கோயிலில் உண்டியல் கிடையாது.  



     இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்கள் தேர் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. 

            இந்த ஆண்டு மே மாதம் 24,25 மற்றும் 26ம் நாட்களில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.  26ம் தேதி இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக “தெருக்கூத்து” நடைபெற்றது.  தெருக்கூத்து கலைஞர்கள் இரவு 9.00 மணிக்கு கோயிலுக்கு வந்துவிட்டனர்.  எந்த ஊரிலிருந்து வந்துள்ளார்கள் என்று அறிந்துக்கொள்ள நானும், என்னுடைய நண்பர்களும் இரவு 09.45 மணிக்கு சென்று பார்த்தபோது, என்னுடைய சிறுவயது நண்பன் ஆனந்தனின் “ஸ்ரீ சக்தி அம்மன்” தெருகூத்து குழுவினர் ஆரணி – பெரணமல்லூரில் இருந்து வந்திருந்தனர்.



            நான் ஆனந்தனை சந்தித்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.  செல்பேசி எண்ணை வாங்கிக் கொண்டேன்.
            “எப்பொழுது கூத்து தொடங்கும்?” என கேட்டேன்.
       “எங்களுக்கு இன்னும் இரவு உணவை கோயில் நிர்வாகத்தினர் அளிக்கவில்லை” என்றான் ஆனந்தன். 


            அப்போது இரவு 09.55 மணி.  இதுதான் இன்றைய தெருகூத்து கலைஞர்களுக்கு உள்ள நிலையா என என்னை நானே கேட்டுக்கொண்டேன்.  இவர்கள் எப்போது சாப்பிட்டு, எப்போது கூத்து தொடங்குவது?  பின்னர் நேரமானதால், நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன்.  இரவு படுக்கையில் படுத்தவுடன் தூக்கம் வராமல், என் மனம் 25 ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றுவிட்டது.

            ஆனந்தன் சிறுவயதில் எங்கள் வீட்டு அருகில் இருந்த அவனுடைய மாமா வீட்டிற்கு திருவண்ணாமலை மாவட்டம், நம்பேடு கிராமத்தில் இருந்து வந்தான்.  அப்போது அவனுக்கு வயது 12.  எனக்கு வயது 10. அவன் ஊரில் இருந்த தெருகூத்து குழுவினரைப் பார்த்து அவர்களைப்போலவே பாடுவது, ஆடுவது மற்றும் நடிப்பது என எங்களுக்குச் செய்துக் காட்டுவான். 

            ஒரு கோடைகால விடுமுறையில் சிவன் பார்வதி நாடகம் ஆனந்தன் தலைமையில் இனிதே நிறைவேறியது.  நான் சிவன் வேடமும், எங்கள் எதிர் வீட்டு இசுலாமியப் பெண் பாத்திமா பார்வதி வேடமும் கட்டினோம்.  ஆனந்தன் எங்களுக்கான வசனங்களைச் சொல்லிக் கொடுத்தான்.  ஒப்பனை செய்தான்.  நாடகத்தில் ஒரு பாடலும் பாடினான். தாளம் போடுவதற்கு பழைய வண்ணப்பூச்சி கலன்களையும், ஆணிகளையும் பயன்படுத்தினான். 

        இந்த நாடகம் நடைபெறவிருப்பதை எங்கள் தெருவில் இருந்த அனைத்து சிறுவர்களுக்கும் தெரியப்படுத்தினோம்.  ஏறக்குறைய 20 சிறுவர் சிறுமியர் மற்றும் ஒன்றிரண்டு பெரியவர்களும் இந்த நாடகத்தை வந்து பார்த்தார்கள்.  எங்களுக்கு ஒப்பனை செய்ததும் ஆனந்தனே.  நாடகம் சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்றது.  அப்போது தெரியுமா அவனுக்கு பின்னாளில் தான் ஒரு தெருக்கூத்து குழுவிற்கு வாத்தியார் ஆகப்போவதாகவோ? அதை நடத்தப்போவதாகவோ?

            பின்னர் அவன் எங்கள் ஊரில் இருந்த பால் பண்ணையில் தினக்கூலி பணியாளராக வேலைக்குச் சேர்ந்தான்.  நான் தொடர்ந்து படித்தேன். பின்னர் அவன் அவனுடைய சொந்த ஊருக்கே விவசாயம் செய்ய சென்றுவிட்டான். 

            ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர், எங்கள் ஊரில் பொங்கல் விழாவில் ஒரு தெருகூத்து நடைபெற்றபோது, நான் தற்செயலாக சென்று பார்த்துக்கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு பெண் வேடமிட்டவர், பெண்களுக்குச் சற்றும் குறையாத நளினத்தோடு ஒரு பாடலுக்கு ஆடிக்கொண்டிருந்தார்.  இவர் யார், பெண் போலவே இருக்கிறாரே? எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே? என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.  பின்னர் கூத்து முடிந்ததும், அந்த பெண் வேடமிட்டவர் ஆனந்தன்தான் என அறிந்து, “என்ன ஆனந்தன், எப்போதிலிருந்து தெருகூத்து குழுவில் இணைந்தாய்?” என கேட்டன். “இப்போதுதான் ஒரு ஐந்து ஆண்டுகள் ஆனது என்றான்.”  “விவசாயம் என்ன ஆனது?” என்றேன். “விவசாயமும் கூத்தும் இரண்டற கலந்துவிட்டது” என்றான்.

           அதன் பின்னர் இப்போதுதான் நான் ஆனந்தனைப் பார்த்தேன். ஒரு வாரம் கழித்து, ஒரு திங்கள் கிழமை காலை 7.30 மணிக்கு ஆனந்தனை செல்பேசியில் அழைத்துப் பேசினேன். 

            இரண்டு பிள்ளைகள் என்றான்.  பெரிய பெண் பிள்ளை 10ம் வகுப்பில் 468 மதிப்பெண் எடுத்துள்ளதாகவும், ஆரணி-பெரணமல்லூரில் வசித்து வருவதாகவும், மாதம் 15 நாட்களுக்கு மேல் கூத்து நடத்த நிகழ்ச்சிகள் முன்பதிவு செய்யப்படுவதாகவும், தான் இப்போது இக்குழுவின் வாத்தியார் எனவும், ஒரு கூத்திற்கு தோராயமாக, தொலைவுக்கு ஏற்றாற்போல் ரூ.15,000/-லிருந்து ரூ.25,000/- பெறுவதாகவும் சொன்னான்.  தற்போது கூத்துதான் முழுநேர பணி எனவும் கூறினான்.  இத்தகவல்களைக் கேட்டபோது, ஆனந்தனை திருவிழாவில் பார்த்தபோது என் மனத்தில் நான் கொண்ட “என்ன இப்படி கண்கள் சுற்றிலும் கரு வளையம் சூழ்ந்து, தலை முடியெல்லாம் கொட்டிவிட்டுள்ளதே? அவன் வாழ்வையும் இருள் சூழ்ந்துக் கொண்டதோ?” என்ற கணிப்பினை முற்றிலும் மாற்றிக் கொண்டேன்.    

    பழங்கால கலைகளின் மேல் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தை தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், திரைப்படங்களும் சிதைத்தும், மீண்டும் மக்கள் இக்கலைகளின்மேல் குறிப்பாக தெருக்கூத்தின்மேல் மீண்டும் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். 

            பழங்கால கலைகளை வளர்க்க, அழிந்துவிடாமல் காக்க ஆனந்தனைப்போல் எத்தனை பேர் தங்கள் வாழ்வை அர்பணித்துள்ளனர் என நினைத்தபோது, திருவிழாவில் நான் கண்ட மற்றுறொரு காட்சியும் பழங்கால உணவுப் பழக்கத்தின் மேல் மக்கள் எவ்வளவு ஆர்வமாக உள்ளனர் என்பதைக் காண நேர்ந்தது.  



          அது ஒரு சர்பத் கடை.  55 வயது மதிக்கத்தக்க பெரியவர்  ஒவ்வொரு ஆண்டும் திருவிழா தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் வந்து கடை போடுவார்.  திருவிழா முடிந்து 10 நாட்கள் வரை கடை இருக்கும்.  இந்த 20 நாட்களும் குறைந்த விலையில் விதவிதமான சர்பத் போட்டுக் கொடுப்பார்.

           இந்த ஆண்டும் அந்த சர்பத் கடையில் கட்டுக்கடங்காத கூட்டம்.  குறைந்தது 15லிருந்து 20 நிமிடங்கள் காத்திருந்து, முண்டியடித்து மக்கள் சர்பத் வாங்கி குடித்துச் சென்றனர்.  நானும் என் நண்பர்களும் 10 நிமிடங்கள் காத்திருந்து, ரூ.10/-க்கு நன்னாரி சர்பத் வாங்கிக் குடித்தோம்.

               சர்பத் கடையில் இருபது வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண் பிள்ளைகளும் 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் சர்பத் போட்டு கொடுத்தனர்.  அந்தப் பெண்மணியிடம், உங்கள் கடையில் ஒரு பெரியவர் இருப்பாரே அவர் எங்கே?” என்று கேட்டேன்.  அதற்கு அந்தப் பெண்மணி, “அவர் என்னுடைய வீட்டுக்காரர்தான். திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார், அதோ அந்த படத்தில் இருக்கிறார்” என்று கடையில் பூமாலை போடப்பட்டு இருந்த அந்த பெரியவரின் படத்தைக் காண்பித்தார். 


அந்த படத்தைப் பார்த்தபோது, அந்த பெரியவர் தன்னுடைய மேற்பார்வையில் இப்போதும் சர்பத் வியாபாரம் செய்வதுபோன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.  திருவிழாவில் மற்ற பன்னாட்டு குளிர்பானங்களின் வியாபாரத்தைக் காட்டிலும் இந்த சர்பத் கடையில் வியாபாரம் அபாரம்.

          நம் மக்கள் பாரம்பரிய கலையையும், உணவையும் ஒதுக்கவில்லை.  அவர்களுக்கு அவை மறுக்கப்படுகிறன.  பன்னாட்டு நிறுவனங்களாலும், ஊடகங்களாலும் மறைக்கப்படுகிறது.  இதனாலேயே அவர்கள், என்ன கிடைக்கிறதோ அதை பயன்படுத்தும் நிலைக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்படுகின்றனர்.

     இந்நிலை மாறும் என்பதற்கு இந்த இரண்டு நிகழ்வுகள் எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தது என்றால் மிகையில்லை.